ஓம் ஸ்ரீ சாயிராம்
முக்திநாத் யாத்திரை -- எனது அனுபவம்
Muktinath yatra – personal experience
22 – 29 ஏப்ரல் 2018
எழுதியவர் சித்ரா இளங்கோவன்
முக்திநாத் யாத்திரை -- எனது அனுபவம்
Muktinath yatra – personal experience
22 – 29 ஏப்ரல் 2018
எழுதியவர் சித்ரா இளங்கோவன்
நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான முக்திநாத் இந்துக்களுக்கு மட்டும் அல்லாது புத்தர்களுக்கும் புனிதமான ஷேத்திரம் ஆகும். நூற்றி ஆறாவதான இந்த ஸ்தலம் நேபாளத்தில் உள்ள போக்கரா நகரத்தின் அருகில் உள்ளது. இங்கு செல்வதற்கு தில்லியிலிருந்து விமானம் மூலமாக நேபாள் தலைநகரான காத்மாண்டு வழியாகவும், சென்னையிலிருந்து புகைவண்டி மூலம் உத்திர பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் வரை சென்று பின் அங்கிருந்து பஸ் மூலம் நேரடியாக போக்கராவும் செல்லலாம். சென்னையிலிருந்து செல்லும் பக்தர்களுக்காக தமிழ் நாடு அரசாங்கம் மானியம் வழங்குவதால் பக்தர்கள் அவசியம் இந்த சலுகையை உபயோகித்து முக்திநாதரை தரிசிக்கும் வாய்ப்பைப்பெற வேண்டுகிறோம்.
நாங்கள் தில்லியில் வசிப்பதால் விமானம் மூலம் காத்மாண்டு சென்று அங்கிருந்து போக்கரா வழியாக முக்திநாத் சென்றோம். நானும் எனது கணவர் இளங்கோவனும், எங்களது குடும்ப நண்பரான திரு சபாநாயகமும் அவரது மனைவி மாலதியும் இந்த யாத்திரையை மேற்கொண்டோம். நாங்கள் கடந்த பத்து வருடமாக பல யாத்திரைகள் செய்து வருகிறோம். ** (இது பற்றிய விவரம் கீழே தரப்பட்டுள்ளது)
முக்திநாத் யாத்திரையை நாம் தனியாகவும், அல்லது டூர் ஏஜென்ட்கள் மூலமும் செய்யலாம். நாங்கள் முன்பு கயிலாயம் சென்ற பொழுது காத்மாண்டுவில் உள்ள “சாம்ராட்” என்ற ஏஜென்ட் மூலம் சென்றதால் அவர்களது மூலமே இந்த யாத்திரையையும் செய்ய தேர்ந்தெடுத்தோம். இவர்களது பாக்கேஜ் விவரமானது: காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து நம்மை அழைத்து சென்று திரும்பும் வரை நம்முடனே இருக்க ஏசி கார், காலை சிற்றுண்டி, மதியம் உணவு, இரவு உணவு, சுற்றிப்பார்க்க ஆகும் டிக்கெட், போக்ராவிலிருந்து ஜோம்சம் என்னும் இடம் சென்று வர விமான டிக்கெட், ஜோம்சமிலிருந்து முக்திநாத் சென்று வர ஷார் வண்டி, தங்குவதற்கு மூன்று ஸ்டார் ஹோட்டல்; இதற்கு ஒருவருக்கு தலா 29,000 ஆயிரம் இந்திய பணம் ஆனது. கீழே வருவது எங்களது யாத்திரையின் விரிவான அனுபவங்கள்.
முதல் நாள்: 22nd April’ 18
எங்களது விமானம் “நேபால் ஏர்லைன்ஸ்” காலை 10.30 க்கு என்பதால் எட்டு மணிக்கு தில்லி இந்திராகாந்தி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் நாங்கள் சந்தித்துக்கொண்டோம். பின் செக்யூரிட்டி, இம்மிகிரேஷன் முடிந்து விமானத்தில் ஏறிய நாங்கள் மதியம் 12.30 க்கு காத்மாண்டுவின் திருபுவன் விமான நிலையத்தை அடைந்தோம். அங்கு எங்களுக்காக கார் காத்துக்கொண்டிருந்ததால் அரை மணி நேரத்தில் தாமேல் என்னும் இடத்தில் உள்ள ஹோட்டல் மர்ஷயாங்டிக்கு வந்தோம். இரண்டு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பூகம்பத்தின் சேதங்களை பழுது பார்க்கும் வேலை நடந்து கொண்டிருப்பதால் காத்மாண்டுவின் வீதிகள் புழுதியும், டிராபிக்கும் நிறைந்ததாகவே இருந்தது.
மதிய உணவிற்கு பிறகு சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு மாலை பசுபதிநாத் கோயிலுக்கு சென்று வந்தோம். ஆறு வருடங்களுக்கு முன் கயிலை செல்லும்முன் இந்த கோயிலை பார்த்த போது இருந்த “கலை” அம்சம் தற்போது இல்லாதது போல தெரிந்தது. அங்குள்ள கர்ப்பகிரஹம் இருப்பது நமது காசி கோயில் போல நான்கு புறமும் நின்று சிவனை தரிசிக்கலாம். ஏனோ தற்போது மூன்று கதவுகள் சாத்தி இருந்ததோடு ஆரத்தி நடந்த சமயத்திலும் கூட விளக்குகள் சரியாக போடாமலும், பக்தர்கள் கூட்டம் இடித்துக்கொண்டும் தரிசனம் செய்ய வேண்டிவந்தது.
இரண்டாவது நாள்: 23rd April’ 18
காலை சிற்றுண்டிக்கு பிறகு காத்மாண்டுவை சுற்றிப்பார்க்க கிளம்பினோம். முதலில் சென்றது “தக்ஷிண் காளி” கோயில். இது நகரத்திலிருந்து 22 கிமீ தூரத்தில் உள்ளது. பூகம்பத்தின் விளைவால் ஏற்பட்ட பழுதுகள் இன்னும் சரி செய்யாமல் இருந்ததால் கரடு முரடான பாதைகளில் நீண்ட தூரம் செல்லவேண்டியதாயிற்று. இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பிரயாணம் செய்த களைப்பு கோயிலை நெருங்கியதும் அங்குள்ள அமைதியும், சுற்றியுள்ள இமயமலையின் குளிர்ச்சியும் உள்ளத்திற்கும் உடலுக்கும் புத்துணர்வு கொடுப்பதாயிருந்தது. மிகச்சிறிய கோயில்தான், ஆனால் நேபாளத்தில் காளி கோயில்கள் அனைத்தையும் சக்திபீடம் என்று அழைப்பதால் சிறியதாக இருந்தாலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி இருந்தது.
நேபாளத்தில் காளி கோயில்களில் மிருக பலிகள் கொடுக்கும் பழக்கம் இன்னும் இருந்து வருகிறது. செவ்வாய், சனிக்கிழமைகள் உகந்த நாட்கள் என்பதால் கூட்டமும் நிறைய இருக்கும். கோயில் வளாகத்திலேயே ஆடு, கோழி, புறா போன்றவற்றை பலி இடுகிறார்கள். இந்த பழக்கத்தை நிறுத்த அரசாங்கம் முன் வர வேண்டும் என்ற கருத்தை அங்கு வந்திருந்த பெரும்பாலான பக்தர்கள் வெளிப்படையாகவே கூறிக்கொண்டிருந்தனர்.
அடுத்து நாங்கள் சென்றது “சுவயம்புநாத் புத்தா” கோயில். இது புத்தர் கோயிலாக இருந்தாலும் நிறைய சுற்றுலாப் பயணிகளும் வருகிறார்கள். சிறு மலைக்குன்றின் மேல் இருப்பதால் நிறைய படிகள் ஏறிச்செல்ல வேண்டும். அடுத்து நாங்கள் சென்றது ஜல நீலகண்டர் கோயில். சிறிய குளத்தில் சுருண்டு கிடக்கும் ஆதிசேஷன் மேல் படுத்து கிடக்கும் கோலத்தில் உள்ள விஷ்ணுவே ஜல நீலகண்டர் என்று அழைக்கப் படுகிறார். கோயில் என்று விமானங்களுடன் இல்லாமல் திறந்த வெளியில் உள்ளது. ஆதிசேஷனையும் அதன் மேல் நிம்மதியாக படுத்திருக்கும் விஷ்ணுவையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த இரண்டு இடங்களுக்கு சென்ற பின் மதிய உணவு வேலை என்பதாலும் வெய்யில் அதிகமாக இருந்ததாலும் ஹோட்டலுக்கு திரும்பி விட்டோம். பெரிய கடைத்தெருவின் நடுவில் எங்களது ஹோட்டல் இருந்ததால் மாலை இந்த கடைகளில் தேவையான சில பொருள்கள் வாங்கி வந்தோம்.
தஷிண காளி கோயில்
மூன்றாவது நாள்: 24th April’ 18
இன்று மனோகாம்னா என்ற கோயிலுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து போக்ரா செல்ல வேண்டும். காலை ஏழு மணிக்கெல்லாம் ப்ரேக்பாஸ்டை முடித்துக்கொண்டு கிளம்பி விட்டோம். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு “ரோடு பெர்மிட்” அவசியம் என்பதால் எங்களது ஏஜென்ட் முன் கூட்டியே ஏற்பாடு செய்திருந்தார்.
இங்கிருந்து மனோகாம்னா 140 கிமீ தூரத்தில் உள்ளது. காலையிலேயே வெய்யில் கடுமையாக இருந்தது. கோயிலை அடைய நான்கு மணி நேரம் ஆயிற்று. மலை உச்சியில் உள்ள இந்த கோயிலுக்கு “கேபிள் கார்” மூலம்தான் செல்ல முடியும். சித்வான் என்ற மலைக்கும் கோர்கா என்ற மலைக்கும் நடுவில் 2.8 கிமீ தூரத்திற்கு இந்த கேபிள் கார் செல்கிறது. பத்து நிமிடம்தான் ஆகும் என்றாலும் இதற்காக காத்திருக்கும் நேரம் தான் அதிகம். சிறிய கோயில்தான் என்றாலும் சக்தி வாய்ந்த கோயில் என்பதால் எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். அதிலும் செவ்வாய்கிழமையும் சனிக்கிழமையும் பலி இடுவதற்கு முக்கிய தினங்கள் என்பதால் இந்த நாட்களில் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும்.
கடுமையான வெய்யிலில் ஒரு மணி நேரம் கேபிள் காருக்காக காத்திருந்த பின்னரே எங்களுக்கான முறை வந்தது. கோயிலை அடைந்த எங்களுக்கு அங்கிருந்த நீண்ட லைனை கண்டதும் பெரிய மலைப்பாகி விட்டது. இதில் சிறப்பு என்ன என்றால் நமது ஊரைப்போல இடித்துகொண்டு தள்ளிக்கொண்டு என்று இல்லாமல் வரிசையாகவும் அமைதியாகவும் லைனில் நின்று தரிசனத்திற்கு சென்றதுதான்.
பூகம்பத்தின் விளைவால் கோயிலுக்கு அதிக சேதாரம் ஆகியிருக்கிறது. மேல் விமானமே விழுந்து விட்டதால் முழு கோயிலையும் புதுப்பிக்கும் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. கோயிலை ஒட்டியே தகரத்தினால் ஒரு சின்ன ஷெட் கட்டி மூலஸ்தானத்தில் இருந்த தேவியை அதில் தற்காலிகமாக பிரதிஷ்டை செய்து வழிபாடும் செய்து வருகிறார்கள். எங்களுக்கு தரிசனம் கிடைக்க நான்கு மணி நேரம் ஆகியது. தேவிக்காக நாங்கள் தில்லியிலிருந்து பூஜைக்கான பொருட்களை வாங்கி சென்றிருந்தோம். இங்கெல்லாம் தேவிக்காக “மங்கள வஸ்து” என்னும் அலங்காரப் பொருள்களாகிய மணிமாலை, பொட்டு, தோடு, வளையல், மோதிரம், நெயில்பாலிஷ், மருதானை சாந்து, கொலுசு, மெட்டி, புடவை போன்ற சாமான்களை வசதிக்கு தகுந்த விலையில் வாங்கி பூஜைக்காக எடுத்து செல்வார்கள்.
திரும்பும்போது கேபிள் கார் உடனடியாக கிடைத்து விட்டதால் நான்கு மணிக்கெல்லாம் கீழே இறங்கி விட்டோம். கீழேயுள்ள ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டுவிட்டு உடன் போக்கரா கிளம்பி இரவு ஒன்பது மணி சுமாருக்கு ஹோட்டல் “லேன்ட் மார்க்” வந்தோம்.
நாளைக்கு ஜோம்சம் சென்று அங்கிருந்து முக்திநாத் செல்ல வேண்டும். இரவு உணவிற்கு பிறகு இரண்டு நாட்களுக்கு வேண்டிய பொருட்களை தனியாக பாக் செய்து விட்டு மற்றதை ஹோட்டலில் உள்ள லாக்கரில் வைத்துவிட்டு வந்தோம்.
நான்காவது நாள்: 25th April’ 18
காலை நான்கரை மணிக்கெல்லாம் ரெடி ஆகி கீழேயுள்ள டைனிங் ஹாலுக்கு டீ அருந்துவதற்காக வந்தோம். ரிசப்ஷனிஸ்ட் எங்களது ப்ரேக்பாஸ்டையும் பாக் செய்து தயாராக வைத்திருந்ததால் நன்றி கூறிவிட்டு உடன் கிளம்பி விட்டோம். ஹோட்டலிலிருந்து ஏர்போர்ட் வர பதினைந்து நிமிடம்தான் ஆனது.
போக்ராவிலிருந்து ஜோம்சம் 160 கிமீ தூரத்தில் உள்ளது. இங்கு செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. பஸ், மேடடோர் போன்று தனியார்துறை நிறுவனங்கள் நடத்தும் போக்குவரத்தும், சிறிய விமானங்களும் உள்ளன. பஸ்ஸில் செல்ல எட்டிலிருந்து பத்து மணி நேரமும், விமானமூலம் பதினைந்து நிமிடங்களும் ஆகும். ஆனால் விமானமூலம் செல்வதற்கு முன் கூட்டியே டிக்கெட் ரிசெர்வ் செய்திருக்கவேண்டும்.
என்னதான் முன் கூட்டியே விமான டிக்கெட் புக் செய்திருந்தாலும் கடைசி நேரத்தில் கான்சல் ஆக வாய்ப்புள்ளது. தட்பவெப்ப நிலை சரியில்லாமல் இருந்தாலும், நாம் புக் செய்திருந்த விமானம் பழுதாகி விட்டாலும் பிரயாணம் நிச்சயமாக தடைபடும். பெரும்பாலும் தட்பவெப்ப நிலை மாறிக்கொண்டே இருப்பதால்தான் கான்சல் ஆகிறது. எல்லாம் சரியாக இருந்தால் ஒரு நாளைக்கு ஆறு முறை சென்று வருகிறார்கள்.
என்னதான் முன் கூட்டியே விமான டிக்கெட் புக் செய்திருந்தாலும் கடைசி நேரத்தில் கான்சல் ஆக வாய்ப்புள்ளது. தட்பவெப்ப நிலை சரியில்லாமல் இருந்தாலும், நாம் புக் செய்திருந்த விமானம் பழுதாகி விட்டாலும் பிரயாணம் நிச்சயமாக தடைபடும். பெரும்பாலும் தட்பவெப்ப நிலை மாறிக்கொண்டே இருப்பதால்தான் கான்சல் ஆகிறது. எல்லாம் சரியாக இருந்தால் ஒரு நாளைக்கு ஆறு முறை சென்று வருகிறார்கள்.
பஸ்மூலம் பிரயாணம் செய்வது மிகவும் கடினமானது. கரடுமுரடானதும் பாம்பை போல வளைந்து நெளிந்தும் செல்லும் ரோட்டில் பத்துமணி நேரம் உட்கார்ந்து வருவது, அதுவும் மலை ஏற்றத்தில் ஏறுவது என்பது முக்கியமாக வயதானவர்களுக்கு மிகவும் சிரமமாகிவிடும்.
எங்களது விமானம் “நேபாள் ஏர்லைன்ஸ்” இருபது சீட்டுகளே கொண்ட சிறிய விமானம்தான். இதை தவிர “தாரா” என்னும் தனியார் விமானமும் செல்கிறது. காலை ஆறு மணியிலிருந்து மதியம் பதினோறு மணிவரை தான் இந்த விமானங்கள் பறக்கிறது. அதற்கு மேல் தென்கிழக்கு காற்று வீச ஆரம்பித்து விடும். இந்த காற்றின் வேகம் விமானத்தையே திசை திருப்பி விடும் அளவுக்கு பேய் காற்றாக வீசும். இதன் நடுவில் கனத்த மழையோ அல்லது மேக மூட்டமோ இருந்தாலும் விமானம் தாமதமாகிவிடும். இதனால் பாதிகப்படும் பயணிகள் வேறு வழியின்றி அங்கேயே தங்க வேண்டி வரும் என்பதால் முன்கூட்டியே தேவையான பணம், உடைகள் போன்ற அத்தியாவசியமான பொருட்களை கைவசம் வைத்திருக்க வேண்டியது அவசியம். விமானத்தில் பறக்கும்போது போட்டோ எடுக்கலாம். சிறிய கைப்பைகளை மட்டுமே விமானத்தில் எடுத்துச்செல்லலாம்.
எங்களது விமானம் சரியாக ஆறு மணிக்கு கிளம்பி விட்டது. விமானத்திலிருந்து பனிபடர்ந்த அன்னபூர்ணா மலைத்தொடரை நமது இடது பக்கமும் வறண்ட தௌளகிரி மலைத்தொடரை வலது பக்கமும் பார்க்கலாம். பனிச்சிகரங்களில் காலை வெய்யில் பட்டு தங்க நிறமாக ஜொலிக்கும் அழகை வருணிக்க இயலாது. இயற்கையின் இந்த ரம்மியமான காட்சிகளில் நமது மனதை பறிகொடுத்து விடுவோம். வழியில் “மச்சபுசாரே” (Machapuchare) என்ற மீன்வால் சிகரத்தையும் பார்க்கலாம். இது நேபாள மக்களுக்கு கயிலாய மலையை போலவே மிகவும் புனிதமான மலையாகும். இங்கு ‘’ட்ரெக்கிங்” செல்வதற்கு அனுமதி கிடையாது.
இருபது நிமிடங்களில் எங்களது விமானம் ஜோம்சம் ஏர்போர்ட்டை அடைந்தது. உடனேயே அங்கு காத்திருந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐந்தே நிமிடங்களில் திரும்பியும் போய் விட்டது. கண்டகி நதி ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் ஓடுகிறது. கங்கை நதியை போல அதிக பிரவாகம் இல்லை. இயற்கை வளம் நிறைந்த இந்த ஜோம்சம் பனிச்சிகரங்களால் சூழப்பட்ட அழகான சிறிய கிராமம்தான் என்றாலும் எல்லா வசதிகளும் கொண்டிருந்தது. இந்த கிராமத்திற்கு முக்திநாத் செல்லும் பக்தர்களை தவிர அன்னபூர்ணா மலையில் ட்ரெக்கிங் செய்ய யூரோப்பியர்களும் வருகிறார்கள். வருடத்தில் எட்டு மாதங்களுக்கு பயணிகள் வந்து செல்வதால் ஹோட்டல்களும் பயணியர் தங்கு விடுதிகளும் (கேஸ்ட் ஹவுஸ்) நிறைய உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2736 மீட்டர் உயரத்தில் ஜோம்சமும், 3800 மீட்டர் உயரத்தில் முக்திநாத்தும் உள்ளது.
ஹோட்டல் மெஜெஸ்டியில் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்ததால் ஏர்போர்ட்டிலிருந்து எங்களை அழைத்துச்செல்ல பையன் ஒருவன் வந்திருந்தான். ஐந்தே நிமிடங்களில் நடந்து ஹோட்டலுக்கு சென்று விட்டோம். அந்த கிராமத்திற்கு இந்த ஹோட்டல் வசதியானதுதான் என்று கூறவேண்டும். ஹோட்டலின் உரிமையாளர்களே எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்கிறார்கள். கையில் எடுத்து வந்த சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு உடன் முக்திநாத் கோயிலுக்கு கிளம்ப ரெடியாகி விட்டோம்.
எங்களது பாக்கேஜ் படி ஷார் ஜீப்பில் செல்ல வேண்டும். ஆனால் ஹோட்டலின் உரிமையாளர் எங்களை ஷார் ஜீப்பில் செல்ல வேண்டாம் என்றும் வழி நெடுக ரோடு கரடுமுரடாக இருப்பதோடு ஜீப்பில் அதிக நபர்களையும் ஏற்றிக்கொண்டு செல்வார்கள், அத்தோடு இரண்டு மணி நேரம் இந்த வழியிலேயே செல்ல வேண்டும் என்பதால் எங்களை தனியாக ஒரு வண்டியில் செல்ல கேட்டுக் கொண்டார். தன்னிடமே “சுமோ” வண்டி இருப்பதால் அதில் செல்லலாம் என்று வற்புறுத்தினார். எங்களுக்கு பாக்கேஜ் படி ஒருவருக்கு 300 ரூபாய் இந்திய பணம் (ஆக எங்கள் நால்வருக்கும் 1200/-) என்றிருந்தது. ஆனால் இவரோ 4,500 ரூபாய் ஆகும் என்றதால் முதலில் தனது வண்டியை நமது தலையில் கட்டுகிறாரோ என்று நினைத்தோம். பிறகு யோசித்ததில் வசதியாக போய் வரலாம் என்றால் எடுத்துக்கொள்ளலாமே என்று அவரிடமே வண்டியை ஏற்பாடு செய்துகொண்டு கிளம்பினோம். திரும்பும் வழியில் டிரைவர் உங்களுக்கு கண்டகி நதியிலிருந்து சாளக்கிராமம் தேடி எடுத்துக்கொடுப்பான், நேரத்தை பற்றி யோசிக்க வேண்டாம் என்று கூறியது சந்தோஷமாக இருந்தது.
உண்மையிலேயே வழி நெடுக கூழாங்கல் தான் ரோடாக இருந்தது. பதினாறு கிமீ தூரம் செல்ல வேண்டும். காக்பேணி என்ற அடுத்த கிராமம் வரும் வரை ரோடு இப்படியேதான் இருந்தது. அதன் பிறகு தார் ரோட் போட்டிருந்ததால் பயணம் சுலபமாயிற்று. காலை ஒன்பது மணி சுமாருக்கு முக்திநாத் அடிவாரத்திற்கு வந்தோம். இந்த கிராமம் வரைதான் வண்டிகள் வரும். இதற்குமேல் ஒன்றரை கிமீ தூரம் மலை ஏற வேண்டும். நிறைய குதிரைகள் கிடைக்கும் அல்லது நடந்தும் செல்லலாம், அதிக சிரமமானது அல்ல. நாங்கள் குதிரை வைத்துக்கொண்டோம். மேலே ஏறுவதற்கு மட்டும் ஒருவருக்கு 300 ரூபாய் இந்திய பணம் ஆனது.
குதிரையை அமர்த்தி கொண்டால் போவதற்கு மட்டும் முதலில் வைத்துக்கொள்ள வேண்டும். நம்மை மேலே விட்டு விட்டு நாம் திரும்பி வரும் வரை நமக்காக காத்திருக்க மாட்டார்கள். தரிசனம் முடிந்து கீழே இறங்க குதிரைக்காக காத்திருக்கும் யாத்திரிகர்களை அழைத்துக்கொண்டு சென்று விடுவார்கள். நிறைய குதிரைகள் கிடைக்கும் என்பதால் திரும்பும் சமயம் வேறு ஒன்றை ஏற்பாடு செய்துகொள்ளலாம். பாறைகளோ, பனிக்கட்டிகளோ இருக்காது என்பதால் நடந்தே கூட கீழே இறங்கி விடலாம். குதிரையில் செல்ல பத்து நிமிடங்கள்தான் ஆகும். நடந்து சென்றால் அரை மணி நேரத்தில் நடந்து விடலாம். ஆக்சிஜன் அளவு போதுமானதாக இருப்பதால் நடப்பதில் சிரமம் இருக்காது.
மேலே கோயில் மிகச் சிறியதுதான். கோயிலை தவிர வேறு எந்த கடைகளும் கிடையாது என்பதால் பக்தர்கள் முன்கூட்டியே கையில் ஏதேனும் சத்துணவு எடுத்துச்செல்ல வேண்டும். வீட்டில் செய்த பண்டங்கள், முந்திரி திராட்சை பாதாம்பருப்பு, சாக்லேட், ஆரஞ்சு ஜூஸ் போன்ற எனெர்ஜி தரும் உணவு வகைகள் எடுத்துச்செல்லலாம். கீழே இறங்கி விட்டால் நிறைய ரெஸ்டாரண்ட் இருக்கிறது.
மேலே கோயில் மிகச் சிறியதுதான். கோயிலை தவிர வேறு எந்த கடைகளும் கிடையாது என்பதால் பக்தர்கள் முன்கூட்டியே கையில் ஏதேனும் சத்துணவு எடுத்துச்செல்ல வேண்டும். வீட்டில் செய்த பண்டங்கள், முந்திரி திராட்சை பாதாம்பருப்பு, சாக்லேட், ஆரஞ்சு ஜூஸ் போன்ற எனெர்ஜி தரும் உணவு வகைகள் எடுத்துச்செல்லலாம். கீழே இறங்கி விட்டால் நிறைய ரெஸ்டாரண்ட் இருக்கிறது.
108 திவ்விய தேசங்களில் ஒன்றான இந்த ஷேத்ரம் 106 வது இடத்தில் உள்ளது. வலதுபக்கம் அன்னபூரணியும் இடது பக்கம் தெளளகிரியுமாக விரிந்து பறந்து கிடக்கும் மலையின் உச்சியில் வெளியுலகத்து எந்தவித தொடர்பும் இன்றி ஏகாந்தமாக வீற்றிருக்கிறார் நம் பெருமான். பூலோகத்தில் உள்ள கடைசி திவ்விய தேசமாக நாம் இந்த பூத உடலுடன் சென்று தரிசிக்கக் கொடுத்து வைத்திருக்கும் புண்ணிய ஷேத்ரம் ஆகும். இங்கு வந்து பெருமாளை தரிசித்தவர்களுக்கு அடுத்த பிறவி இந்த பூலோகத்தில் இல்லை என்றும் இதற்கும் மேல் நிலையில் உள்ள வைகுந்த பதவிதான் என்று விஷ்ணு புராணத்தில் கூறுவதாக ஐதீகம்.
புராணத்தில் என்ன கூறுகிறதோ இல்லையோ ஆனால் இந்த புண்ணிய ஷேத்திரத்திற்கு வருவது என்பது எம்பெருமானின் அருள் இன்றி அவரின் அடி காண்பது அத்தனை சுலபமானது அல்ல. அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் இயற்கையின் தாக்குதல்கள்; போக்குவரத்தை பாதிக்கும் மலைப்பகுதிக்கே உரிய நிலச்சரிவு, திடீர் காற்றும், மழையும்; உடல் நல ஆரோக்கியம், உள் நாட்டு நிலவரம் என்று இன்னும் கூற விட்டதையும் தாண்டி நமக்கு தரிசனம் கிட்டியது என்றால் நாம் சேகரித்த புண்ணியம்தான்.
இந்த கோயில் பௌத்தர்களுக்கும் புனிதமான இடமாகும். திபெத் செல்லுமுன் குரு பத்மசம்பவா இந்த ஸ்தலத்தில் தங்கி தியானம் செய்ததாக வரலாறு கூறுகிறது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட இடம். நுழை வாயிலில் உள்ள பெரிய பிரார்த்தனை சக்கரங்களை பார்த்துக்கொண்டே உள்ளே செல்லலாம். அடர்ந்த மரங்கள் நிறைந்த வளாகத்தின் உள்ளே நீண்ட அகன்ற ஒற்றையடி பாதையில் சிறிது தூரம் நடந்தால் படிக்கட்டுகள் வரும். நாங்கள் எண்ணியதில் பதினெட்டு படிகள் இருந்தது. மேலே ஏறினால் முதலில் இரண்டு குளங்கள் (தொட்டிகள் என்றும் கூறலாம்) இருக்கும். இது புண்ணிய / பாவ குளம் என்பது. சிறுது தூரத்தில் பசுமுகத்தின் வாயிலிருந்து தண்ணீர் விழுவது போல 108 தண்ணீர் தாரைகளில் கண்டகி நதியின் நீர் விழுந்து கொண்டே இருக்கிறது. முதலில் இந்த புண்ணிய பாவ குளங்களில் மூழ்கி எழுந்து உடன் இந்த தாரையிலும் சென்று குளிக்க வேண்டும்.
மூன்று அடுக்கு கொண்ட “பகோடா” என்னும் வடிவில் உள்ளது கோயில். நடுவில் கர்ப்ப க்ரஹமும் சுற்றி சிறுய பிராகாரமும் இருக்கிறது. அமர்ந்த கோலத்தில் கைகளில் சங்கு, சக்கர, கதா, ஹஸ்தராக தனது நாச்சியார்கள் ஸ்ரீ தேவி பூ தேவிகளுடன் அமர்ந்து பக்தர்களை பரிபாலிக்கிறார். இடது பக்கம் கருடாழ்வாரும், ஆதிசேஷனும் அமர்ந்திருக்க வலது பக்கம் புத்தரும் அருகில் சாளக்கிராமமும் இருக்கிறார்கள். “சாளக்கிராமம்” என்று வைஷ்ணவர்களும் , “முக்திநாத்” என்று பௌத்தர்களும் இந்த ஸ்தலத்தை அழைக்கின்றனர். பெருமாளை பௌத்தர்கள் அவலோகிதேஸ்வரர் என்றும் நாச்சியார்களை டாகினிகள் என்றும் வழிபடுகிறார்கள். அவலோகிதேஸ்வரர் என்றால் கருணை உள்ளவர் என்றும் டாகினிகள் தேவலோக கன்னிகைகள் என்றும் முக்தியை தரக்கூடிய ஸ்தலம் என்பதால் இங்கு வாசம் செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
Picture courtesy – photo gallery
இது தான் சீசன் என்பதால் நிறைய பக்தர்களின் கூட்டம் இருந்தது. மேக கூட்டங்களோ குளிர் காற்றோ இன்றி வெய்யில் இதமாக இருந்தது. ஆனால் நாங்கள் குளிக்க வேண்டாம் என்று முன்கூட்டியே நினைத்திருந்ததால் தலையில் மட்டும் தீர்த்தத்தை விட்டுக்கொள்ளலாம் என்று முதலில் இரண்டு குளத்திலும் தண்ணீரை தெளித்துக் கொண்டு பின் ஒவ்வொரு தாரையிலிருந்தும் தீர்த்தத்தை தெளித்துக்கொண்டே சென்றோம். அப்படி தலையில் விட்டுக்கொள்ளும் போது வீட்டில் இருக்கும் அனைவரது பெயரையும் ஞாபகம் செய்து கொண்டு அவர்களது சார்பிலும் புண்ணிய தீர்த்த சேவையை செய்து கொண்டோம்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் பெரிய லைன் நிற்று கொண்டிருந்ததோடு மிக மெல்லமாகவே நகர்ந்து கொண்டிருந்தது. அவசர வேலை எதுவும் இல்லாததால் இந்த ரம்மியமான சூழ்நிலையில் இயற்கையின் எழிலை ரசித்த படியே நாங்களும் நகர்ந்து கொண்டிருந்தோம். எத்தனை பிறவிகளில் செய்த தவமோ இன்று இங்கு நிற்கும் பேறு பெற்றோம். தற்போது பெருமாளுக்கு சேவை செய்ய புத்த பிக்ஷுவான ஒரு பெண் மட்டும்தான் இருக்கிறார். அழகான அலங்காரங்களோடு வீற்றிருந்த எம்பெருமானை கண்ட மாத்திரத்தில் உள்ளத்தின் உணர்ச்சிகளை கண்கள் பொழிந்து காட்டின. கூட்டம் அதிகமாக இருந்ததால் நிமிட நேரம்தான் தரிசனம் செய்ய முடிந்தது. நாங்கள் தில்லியிலிருந்தே பெருமாளின் சேவைக்காக வஸ்திரம், முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா போன்ற உலர்ந்தபருப்புகள், மற்றும் நாச்சியார்களுக்காக மங்கள வஸ்துவும் எடுத்துச் சென்றிருந்தோம். சிரித்த முகத்துடன் பவ்யமாக நின்றுகொண்டிருந்த பிக்ஷுணி நாங்கள் கொடுத்த வஸ்திரங்களை பெருமாளுக்கும் நாச்சியார்களுக்கும் சாத்திவிட்டு எங்களுக்கும் பிரசாதமாக பெருமாளுக்கு சாத்தியிருந்த வஸ்திரம், பூஜையில் வைக்க “காசு” ஒன்றும் கொடுத்தார். பிராகாரத்தை சுற்றி வந்தால் ஓரிடத்தில் சிறு அக்னி குண்டம் உள்ளது. பக்தர்கள் சாமக்கிரிகைகளாக அகர்பத்தி, சாம்பிராணி, சந்தனக்கட்டை போன்ற வாசனை பொருட்களை அதில் இட்டு அக்னியை வளர்த்துக்கொண்ட இருக்கிறார்கள். அங்கிருந்தே வேறு வழியாக வெளியே செல்ல வேண்டும்.
இந்த முக்திநாத்தில் இரண்டு கோம்பாக்கள் உள்ளன. இங்கிருந்து மேலே சிறிது தூரம் ஏறி சென்றால் நரசிங்க கோம்பா ஒன்றும், ஜ்வாலாமாயி இருக்கும் இடத்தில் தோலா மேபார் கோம்பா ஒன்றும் உள்ளது.
கீழே இறங்கினால் வலது புறத்தில் சிவனுக்கும் தனிக்கோயில் உள்ளது. இதுவும் மூன்று அடுக்கு பகோடா வடிவில் அமைந்த சிறிய கோயில்தான். பிராகாரம் என்று தனியாக இல்லை. திறந்த சதுரத்தின் நான்கு மூலைகளிலும் மிகச்சிறிய அளவில் கோயில் வைத்து அதில் முன் வலது புறத்தில் விஷ்ணுவும், பின்னால் ராமரும், இடது முன் புறம் கிருஷ்ணரும் பின் புறம் கணேசரும் எழுந்தருளியிருக்கிறார்கள். இங்கு பூஜாரிகள் யாரும் இருக்க வில்லை, எங்களைத்தவிர வேறு யாரும் இங்கு தரிசனத்திற்கும் வரவில்லை என்பதால் இங்கு அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தோம். இதன் அருகில் யாகசாலை ஒன்றும் உள்ளது. நடைபாதையின் இடது புறம் உள்ள சிறிய மண்டபம் விஷ்ணு பாதுகா மந்திர் என்பது. குழந்தை யோகியான சுவாமி நாராயண் ஒற்றை காலில் நின்றுகொண்டு தவம் செய்யும் கோலத்தில் உள்ள திறந்த கோயில். இவரது சீடர்கள்தான் முக்திநாத்தை சுற்றி மதில் எடுத்திருக்கிறார்கள்.
இதற்கும் பின்னால்தான் சக்திபீடம் உள்ளது. தோலா மேபார் கோம்பா என்னும் புத்த விகாரத்தில் இருக்கும் இந்த சக்தி பீடத்தையும் பிக்ஷுணிகள் தான் கவனித்துக் கொள்கிறார்கள். ஜ்வாலா மாயி என்று அழைக்கப்படும் தேவி “அக்னி” ரூபத்தில் எழுந்தருளி இருக்கிறாள். கீழே ஓடும் கண்டகியின் சிறு ஓடையின் தண்ணீரின் மேல் நீல நிறத்தில் இந்த ஜ்யோதி எப்போதும் எரிந்து கொண்டே இருக்கிறது. அக்னி ரூபத்தில் இருந்ததாலும் ஐந்து பூதங்களின் சேர்க்கை கொண்டதாகவும் உள்ளது. பூமி, நீர், நெருப்பு, வாயு, ஆகாசம் என்ற பஞ்ச பூதங்களின் தத்துவத்தை இங்கு பார்க்கலாம். இரும்பு வலையால் மூடி இருக்கும் இந்த ஜ்வாலையை மண்டி இட்டு அமர்ந்துகொண்டு உன்னிப்பாக பார்க்கவேண்டும். கிட்டத்தட்ட இந்தியாவில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஜ்வாலாமுகியை போலவேதான். தேவிக்காக கொண்டுவந்திருந்த மங்கள வஸ்து பொருட்களை சமர்ப்பித்து விட்டு நாங்கள் திரும்பி செல்ல மனம் வராமல் அங்கேயே சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து பெருமாளிடம் விண்ணப்பித்துக் கொண்டு பிறகு கிளம்பினோம்.
மதியம் ஒரு மணி சுமாருக்கு திரும்பி செல்வதற்கும் குதிரைகளையே வைத்துக்கொண்டு கீழே இறங்க ஆரம்பித்தோம். இறங்கும் வழியில் சிறு கிராமம் ஒன்று வரும். அங்கு கிராமத்தவர்கள் ரோடில் நிறைய சாளக்கிராமங்களை விற்றுக்கொண்டு இருந்தார்கள். நாங்களும் அங்கிருந்து சாளக்கிராமம் ஒன்று வாங்கிக்கொண்டு வண்டி நின்றிருந்த இடத்திற்கு வந்தோம்.
அடுத்து ஒரு இடத்தில் டிரைவர் வண்டியை நிறுத்தி போட்டோ எடுத்துக்கொள்ள கூறினார். காற்று எத்தனை பலமாக வீசியது என்றால் நாங்கள் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டியிருந்தது. இதனால் தான் சிறிய விமானங்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. அகண்ட கண்டகி ஆற்றின் நடுவில் வண்டியை நிறுத்திக் கொண்டு சாளக்கிராமம் தேட ஆரம்பித்தோம். கரைதான் அகண்டு இருந்ததே தவிர நதி சிறியதாக ஒருபுறம் ஓடிக்கொண்டிருந்தது. கை நிறைய தேடி எடுத்த சாலகிராமங்களை டிரைவரிடம் காட்டியதில் இவை சாளக்கிராமம் அல்ல சாதாரண கற்கள்தான் என்று அவைகளை அங்கேயே போட்டு விட்டு தான் தேடி எடுத்ததை கொடுத்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் தேடி எடுத்ததில் நான்கைந்து சாளக்கிராமம்தான் கிடைத்தது.
விமானத்தில் சற்று பெரிய அளவில் இறுக்கும் சாலகிராமங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். முடிந்த வரை சிறிய அளவில் இருக்குமாறு எடுக்கவும்.
ஹோட்டலுக்குத் திரும்ப மதியம் மூன்று மணிக்கும்மேல் ஆகிவிட்டது. அதன்பிறகு தான் மதிய உணவே சாப்பிட்டோம். மாலையில் கண்டகி நதி வரை சென்று வரலாம் என்று கிளம்பி நடந்தோம். ஆனால் குளிர் காற்று பலமாக வீசியதால் மேல்கொண்டு நடக்க சிரமமாக இருந்ததால் ஹோட்டலுக்கு திரும்பி விட்டோம். மதியம் பதினைந்து டிகிரிக்கு இருந்த வானிலை இரவு இரண்டு டிகிரிக்கு வந்துவிட்டது. இரவு சுட சுட சாம்பார், ரசத்துடன் உணவு தயாரித்திருந்தார்கள்.
சக்தி பீடம் – நீல நிற ஜ்வாலை
ஐந்தாவது நாள்: 26th April’ 18
ஐந்து மணிக்கெல்லாம் நன்றாக வெளிச்சம் வந்துவிட்டது.. கிராமத்தவர்களும் இத்தனை அதிகாலையிலேயே குளிரையும் பொருட்படுத்தாமல் வீட்டு வேலைகளில் மும்முரமாகி விட்டனர். எங்களது அறையிலிருந்து தெளளகிரியின் கம்பீரமான தோற்றம் மிகவும் அழகான காட்சியாக இருந்தது. பனிபடர்ந்த சிகரத்தில் சூரிய ஒளி பட்டு தங்கத் தகடாக பல பல என்று மின்னிக்கொண்டிருந்த அழகை பார்த்த படியே உட்கார்ந்து இருந்தோம். குளிப்பதற்கு வெந்நீர் இல்லை என்பதால் போக்ரா சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டோம்.
இதற்கிடையில் எங்களது ஏஜன்ட்டின் கவனக்குறைவால் திரும்பி போக்ரா செல்வதற்கான விமான டிக்கெட்டை முன்கூட்டியே உறுதி செய்யாததால் இன்றைக்கே திரும்ப முடியுமா என்ற கவலை வந்த விட்டது. ஒருவழியாக பேச்சுவார்த்தைகள் முடிந்து கடைசியில் ஒன்பது மணிக்கு நேபாள் ஏர்லைன்ஸில் டிக்கெட் உறுதியாகி வந்தது. காலை டிபனை முடித்துக்கொண்டு விமான நிலையத்திற்கு வந்தோம். அரைமணி நேரத்தில் போக்ரா வந்து விட்டோம். விமான நிலையத்தில் டிரைவர் எங்களுக்காக காத்திருந்ததால் உடன் ஹோட்டலுக்கு திரும்பினோம்.
இன்று போக்ராவை சுற்றிப்பார்க்க இருந்ததால் உடன் தயாராகி கிளம்பி விட்டோம். குப்த் மகாதேவ் கோவில், டெவில் நீர்வீழ்ச்சி, பிந்தியா பாசினி கோவில், பத்ரகாளி கோவில் வரைதான் சென்றோம். ஆனால் மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் கோவில்களை மூடிவிடுவார்கள் என்பதால் பிறகு அருகில் இருந்த கடைகளில் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு ஹோட்டலுக்கு மதிய உணவிற்காக திரும்பி விட்டோம். எங்களது ஹோட்டலுக்கும் எதிரில்தான் (phewa lake) “பேவா” என்னும் பிரசித்தமான ஏரி இருந்ததால் மாலை ஏரிக்கரையில் அமர்ந்துகொண்டு ஏரியை தாண்டி தெரியும் அன்னபூர்ணாவின் அழகை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே சில நிமிடங்களில் எங்கிருந்துதான் அத்தனை மேகக்கூட்டம் வந்ததோ திடீரென்று மழை பலமாகப் பெய்ய ஆரம்பித்துவிட்டது. ஹோட்டலுக்கு திரும்பிய நாங்கள் அடுத்தநாள் காலையிலேயே லும்பினிக்கு கிளம்பிவிட வேண்டும் என்பதால் சாமான்களை பாக் செய்து விட்டு சாப்பிட டைனிங்ஹாலுக்கு சென்றோம்.
phewa lake – பேவா ஏரி
ஆறாவது நாள்: 27th April’ 18
இன்று புத்த பெருமான் பிறந்த இடமான “லும்பினி” என்னும் இடத்திற்கு செல்ல வேண்டும். காலை நாலரை மணிக்கெல்லாம் ரெடி ஆகி கீழே ரிசப்ஷனுக்கு வந்து விட்டோம். அதிகாலையிலேயே எங்களுக்கு வேண்டிய ப்ரேக்பாஸ்ட்டை பாக் செய்து ரெடியாக வைத்திருந்தார்கள். டிரைவரும் வந்துவிட்டதால் டீ அருந்தி விட்டு உடன் கிளம்பி விட்டோம். இங்கிருந்து 170 கிமீ தூரத்தில் லும்பினி உள்ளது. வழியில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திக்கொண்டு கையில் வைத்திருந்த டிபனை சாப்பிட்டுவிட்டு மேற்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். ஆனால் இதற்குமேல் எங்களது பயணம் மிகவும் கடினமாகி விட்டது. கனத்த மழையினாலும் அதனால் ஏற்பட்ட ட்ராபிக் காரணமாகவும், மலைச்சரிவில் இருந்து கீழே இறங்க வேண்டும் என்பதாலும் டிரைவருக்கே வண்டி ஓட்டுவது கடினமாகி விட்டது. சாதாரணமாக இந்த தூரத்தை ஐந்து மணி நேரத்தில் கடந்து விடலாம், ஆனால் ட்ராபிக்கினால் மதியம் இரண்டு மணிக்குத்தான் லும்பினியை அடைந்தோம். எங்களது ஹோட்டல் அசோகாவிலிருந்து புத்தர் பிறந்த இடம் 20 கிமீ தூரத்தில் இருந்ததால் மதிய உணவிற்கு பின் உடன் கிளம்பி ஒரு மணி நேரத்தில் விஹாரம் வந்தோம்.
சுமார் ஐந்து கிமீ பரப்பளவில் உள்ள இந்த தளத்தில் புத்த மதத்தை தழுவிய ஏனைய நாட்டினரும் இங்கு தங்கள் நாட்டின் கலாச்சாரத்தை ஒட்டி கோயில்கள் கட்டி உள்ளார்கள். மாயாதேவி மந்திர் என்பதுதான் முக்கியமான கோயிலாகும். இந்த தளத்திற்கு செல்ல நமது வண்டிகளுக்கு அனுமதி கிடையாது. இ-ரிக்ஷாவில் தான் சுற்றி பார்க்க முடியும் என்பதால் மூன்று மணி நேரத்திற்கு முன்னூறு ரூபாய் இந்திய பணம் கொடுத்து ஒரு வண்டியை அமர்த்திக்கொண்டு கிளம்பினோம். இந்தோனேசியா, ஜப்பான், தாய்லாந்து, கொரியா, சைனா போன்ற நாடுகள் கட்டியிருக்கும் கோயில்களை பார்த்த போது அவர்கள் நாட்டுக்கே சென்றுவிட்டோமோ என்றிருந்தது. எல்லா நாட்டுக் கோயிலுக்கும் செல்ல நேரம் இருக்காது என்பதால் இதன் பிறகு மாயாதேவி கோயிலுக்கு சென்றோம்.
புத்த மதத்தினர்களுக்கு இந்த இடம் மிகவும் புனிதமானதாகும். இங்கிருந்து தோண்டி எடுக்கப்பட்ட தடயங்களில் இருந்து கிடைத்த தகவல்படி ஆறாவது நூற்றாண்டில் புத்த மஹான் வாழ்ந்திருப்பதாக தெரிகிறது. இப்போதும் கூட இந்த தடயங்களை பத்திர படுத்தி வைத்திருப்பதால் நாம் நேரே கண்டும் புரிந்து கொள்ளலாம். கபிலவஸ்துவின் அரசரான சுத்தோதனனின் மனைவி அரசி மாயாதேவி தனது முதல் பிரசவத்திற்காக தந்தையின் நாட்டிற்கு பிரயாணம் செய்து கொண்டிருந்த சமயம் வழியில் லும்பினியை அடைந்த போது பிரசவவலி ஏற்பட்டதால் அங்கே இருத்த ஒரு அடர்ந்த வனத்தில் தங்க வேண்டி வந்தது. அமைதியான வனத்தின் சுற்று சூழல்களில் ஈர்க்கப்பட்ட மாயாதேவி ஒரு சால மரத்தின் கீழே கிளைகளைப் பிடித்துக்கொண்டு நின்ற சமயம் பிரசவம் ஆனது. பிறகு அருகில் உள்ள குலத்தில் குழந்தையையும் தாயையும் குளிப்பாட்டினார்கள். இந்த சால் மரத்தையும் அருகில் உள்ள சிறு குலத்தையும் இப்போதும் நாம் காணலாம். பிற்காலத்தில் வந்த அசோகர், மௌர்யா இவர்களால் கட்டப்பட்டு தற்போது சிதிலமாகி கிடக்கும் நினைவு சின்னங்களையும் பார்க்கலாம். குழந்தை சித்தார்த்தர் பிறந்த ஏழாம் நாள் மாயாதேவி இறந்து விட்டதால் அவரது தங்கையும் சுத்தோதனனின் இரண்டாவது மனைவியுமான கௌதமியால் அன்புடன் வளர்க்கப்பட்டார்.
நுழை வாயிலில் உள்ள அகண்ட ஜ்யோதியை வணங்கி விட்டு உள்ளே பிரவேசித்து அகன்ற பாதை வழியே நடந்து செல்ல வேண்டும். ஒரு விரலால் வானத்தை சுட்டி காட்டிக்கொண்டு நிற்கும் நிலையில் உள்ள குழைந்தை புத்தரின் அழகை பார்த்துக்கொண்டே நிற்கலாம். இன்னும் சிறுது தூரம் நடந்து நுழைவு டிக்கெட் வாங்கிக்கொண்டு வளாகத்தின் உள் செல்ல வேண்டும். இது வரை ஒரு கிமீ மேலேயே நடந்திருப்போம். வெள்ளை மாளிகைதான் மாயாதேவி கோயில். கோயில் என்றால் புத்த விஹாரங்களில் இருப்பது போல சிலைகள் இருக்காது. இதன் உள் இருப்பதும் தோண்டி எடுக்கப்பட்ட சிதிலமான செங்கல் சுவர்கள்தான். முன்னொரு காலத்தில் நினைவு சின்னம் கட்டி இருக்கவேண்டும். சுற்று சுவரை ஒட்டி பத்தடி உயரத்தில் ஓரமாக நடப்பதற்கு சுற்றிலும் மரப்பலகையால் நடைபாதை போட்டிருப்பார்கள். கீழே இடிந்து கிடக்கும் சிதிலங்களை பார்த்துக்கொண்டே சுற்றி வந்தால் இடது புறம் மூலையில் கண்ணாடியால் மூடப்பட்ட ஒரு கருங்கல்தான் மூலஸ்தானம், புத்தர் பிறந்த இடம். இதையும் மேலே இருந்துதான் கீழே எட்டி பார்க்கவேண்டும்.
கோயிலை விட்டு வெளியில் வந்தால் வலது பக்கம் “அசோகா பில்லர்” என்னும் உயரமான இரும்பு தூணும் அதில் அதனுடைய வரலாறும் எழுதியிருப்பதை பார்க்கலாம். இந்த தூண் கண்டெடுக்கப்பட்ட பிறகுதான் நிறைய தகவல்கள் கிடைத்திருக்கிறது. சுற்றிலும் செங்கற்களால் இவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் உடைந்து சிதிலமாகி கிடப்பதையும் பார்க்கலாம்.
நாங்கள் சென்ற சமயம் புத்த பூர்ணிமா என்றதால் வெளி நாடுகளில் இருந்து நிறைய பக்தர்கள் வந்திருந்தார்கள். வளாகத்தை சுற்றியுள்ள அழகான புல் வெளிகளில் அமர்ந்து தியானம் செய்து கொண்டும், சொற்பொழிவுகள் நடத்திக்கொண்டும் இருந்தார்கள். குலத்தைச்சுற்றி அகல் விளக்கால் அலங்கரித்து இருந்தது பார்பதற்கு அழகாக இருந்தது. புத்த பிக்ஷுக்கள் சால மரத்தை சுற்றி அமர்ந்துகொண்டு ஏதோ படித்துக்கொண்டிருந்தார்கள். அமைதியான இந்த சூழலில் சால மரத்தின் அடியில் நாங்களும் தியானத்தில் அமர்ந்துவிட்டோம். இ-ரிக்ஷா ஏழுமணி வரைக்கும்தான் என்றதால் பிறகு நாங்களும் கிளம்பி ஹோட்டலுக்கு வந்துவிட்டோம்
வெள்ளை மாளிகை கோயிலுக்குள் – பக்தர்கள் நின்றுகொண்டு இருக்கும் இடம்தான் புத்தர் பிறந்த இடம். Inside Mayadevi Temple (Picture courtesy by Wikipedia)
வெள்ளை மாளிகை – மாயாதேவி கோயில், புண்ணிய குலம்
ஏழாவது நாள்: 28th April’ 18
இராமாயணத்தை எழுதிய வால்மீகி ரிஷியின் ஆஸ்ரமமும், சீதை பிறந்து வளர்ந்த ஜனகபுரியும் நேபாளத்தில்தான் உள்ளது. இன்று எங்களுக்கு காத்மாண்டு திரும்பவேண்டும். வழியில் “தேவ்காட்” என்னும் இடத்தில் தான் வால்மீகியின் ஆஸ்ரமம் இருக்கிறது என்பதால் அங்கும் செல்லலாம் என்று ட்ரைவரிடம் கேட்டுக் கொண்டோம். அதன்படி காலை ஐந்து மணிக்கெல்லாம் லும்பினியை விட்டு கிளம்பி விட்டோம். நகரத்தை தாண்டி ஹைவேயில் திரும்பிவிட்டால் மரங்கள் அடர்ந்த வனத்தின் நடுவில் ரோடு செல்வதை பார்க்க மிகவும் ரம்மியமாக இருக்கும். இயற்கையின் இந்த அழகை ரசித்துக்கொண்டே நீண்ட பாதையில் பயணம் செல்லலாம். வழியில் இறங்கி போட்டோவும் எடுத்துக்கொண்டோம்.
ஆனால் மலை பிரதேசம் என்றதால் திடீரென்று மழை வலுவாக பெய்ய ஆரம்பித்தது. மலையிலிருந்து கீழே இறங்க வேண்டும் என்பதால் இந்த மழையில் டிரைவருக்கு மிகவும் கவனமாக வண்டியை ஓட்ட வேண்டி இருந்தது. இரண்டுமணி நேரத்திற்கும் மேல் ஆகியிருக்கும் தேவ்காட் வருவதற்கு, ஆனால் ஆஸ்ரம் இருக்கும் இடம் தெரியவில்லை. ஹைவே என்பதால் யாரிடமும் விசாரிக்கவும் முடியவில்லை. மழையும் இன்னும் விடவில்லை என்பதால் இந்த மழையில் நனைந்து கொண்டு எப்படி ஆஸ்ரமத்தை சுற்றி பார்க்க முடியும் என்றாகிவிட்டத்து. டிரைவரின் வசதிக்கு விட்டுவிட்டு நாங்கள் பொறுமையாக அமர்ந்திருந்தோம். இடது பக்கம் ஒரு நுழைவாயில் இருந்ததை பார்த்து டிரைவர் அதில் வண்டியை திருப்பினார். நீண்ட ஒற்றையடி பாதையில் சுமார் இரண்டு கிமீ தூரம் சென்றதும் சிறு கிராமம் ஒன்று வந்தது. அங்கு சென்று விசாரித்ததில் நாங்கள் வழி தவறி விட்டோம் என்றும் ஆஸ்ரம் செல்ல திரிசூலி என்னும் நதியை ஒட்டி செல்ல வேண்டும் என்றும் திரும்பி சென்று அந்த ரோடை பிடிக்க வேண்டும் என்றால் இரண்டுமணி நேரம் ஆகும் என்றதால் நாங்கள் காத்மாண்டு திரும்பி விடலாம் என்று முடிவு செய்து கொண்டோம்.
அருகில் சிறிய ஹனுமான் கோயில் ஒன்று இருந்தது. தரிசனம் செய்து கொள்ளலாம் என்று இறங்கினோம். அங்கிருந்த முதியவர் இங்கே அருகில் தான் “நாராயணீ” என்னும் புண்ணிய நதி ஓடுகிறது அதையும் தரிசித்துவிட்டு வாருங்கள் என்றதால் சரி என்று கிளம்பினோம். சுமார் ஒரு கிமீ கீழே இறங்கினால் பெரிய நதி ஓடுவதை பார்க்கலாம். ஊர்வாசிகள் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு ஏதோ பூஜைகள் செய்து கொண்டிருந்தார்கள். டிரைவரிடம் விசாரித்ததில் இந்த இடத்தில்தான் நாராயணீயும் திரிசூலியும் சங்கமம் ஆகும் இடம் என்றுகூறி இன்னும் சிறிது தூரம் நடந்து சென்றால் சங்கமத்தை பார்க்கலாம் என்று அழைத்துச்சென்றார். நாராயணீ மஞ்சள் நிறமான மண் கலந்த நிறத்தில் நேராக ஓடி வருவதையும், வலதுபக்கத்தில் இருந்து சுத்தமான திரிசூலி வந்து நாராயணீயுடன் கலப்பதையும் காணலாம். கண்டகியின் கிளை ஆறுதான் இந்த திரிசூலி, நாராயணீயுடன் கலந்து தானும் மஞ்சளை பூசிக்கொண்டது போல நிறம் மாறி நாராயணீ ஆகிவிடுகிறது.
“இந்த நாராயணீ நதி எங்களுக்கு மிகவும் புண்ணியமானது, இங்கு தான் முதலையின் பிடியிலிருந்து கஜேந்திரன் மோக்ஷம் அடைந்த இடம் என்பதால் பித்ருக்களுக்கு பிண்டம் இட தூரத்திலிருந்தும் ஜனங்கள் வருவார்கள்” என்று கூறியதைக் கேட்ட எங்களுக்கு ஆச்சரியமாகி விட்டது. எங்கோ போக வேண்டி கிளம்பிய நாங்கள் ஏன் இங்கு வந்தோம் என்பதில் ஏதேனும் பொருள் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு நாங்களும் பிண்டம் கொடுத்து எங்களது மூதாதையரை நினைவு கொண்டு கரை ஏறினோம்.
டிரைவர் காத்மாண்டு செல்ல வண்டியை திருப்பினார். மழை விட்டு விட்டாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்பால் ஹைவேயில் ட்ராபிக் மிகவும் அதிகமாகி விட்டது. ஒருவழியாக மூன்று மணி சுமாருக்கு காத்மாண்டுவில் எங்களது ஹோட்டல் மர்ஷயாங்டிக்கு வந்து சேர்ந்தோம். எங்களது முக்திநாத் யாத்திரையின் இனிமையான அனுபவங்களை நினவுகூர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம்.
எட்டாவது நாள்: 29th April’ 18
இன்று தில்லி திரும்ப வேண்டும். எங்களது விமானம் நேபாள் ஏர்லைன்ஸ் காலை ஆறரை மணிக்குதான் என்றாலும் ஐந்து மணிக்கே எங்களை ஏர்போர்ட்டில் இறக்கிவிட்டு அடுத்து வர இருக்கும் யாத்ரிகர்களை அழைக்க டிரைவர் கிளம்பி விட்டார். கனத்த மழை விடாமல் பெய்து கொண்டு இருந்தாலும் எங்களது விமானம் சரியான நேரத்திற்கு கிளம்பி விட்டது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் காலை டிபனும் கொடுத்து விட்டார்கள். இதற்கிடையில் பைலட் எங்களை விமானத்தின் வலதுபக்க ஜன்னல் வழியாக மலைத்தொடர்களை பார்த்துக்கொண்டு வர சொல்லி அறிக்கை தெரிவித்தார்.
35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது வலதுபக்கம் அன்னபூர்ணாவின் தொடரையும், எவரஸ்ட் சிகரத்தையும் நன்றாக பார்க்க முடிந்தது. இத்தனை உயரத்திலிருந்து இமயமலையின் அழகை பார்த்தபோது பயணிகள் அனைவரும் ஆனந்தத்தால் மகிழ்ந்து வியந்தனர். அதனால்தானோ தேவர்களும் இதன் அழகில் மகிழ்ந்து இங்கே தங்க வருகிறார்கள் போலும்.
காலை எட்டு மணிக்கு தில்லி விமான நிலையத்தை அடைந்த நாங்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினோம். எங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதால் படிப்பவர்களுக்கு தேவையான விவரங்கள் உதவியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் என்றால் மிகவும் சந்தோஷம் கொள்வோம்.
நாங்கள் சென்று வந்த யாத்திரைகளின் விபரங்கள்:
இந்தியாவில் உள்ள பனிரெண்டு ஜ்யோதிர் லிங்க ஷேத்ரங்களையும் தரிசித்துவிட்டு 2011ல் கயிலாய யாத்திரை முடித்து வந்தோம்.
சக்திபீடம் 51ல் முப்பதுக்கும் மேல் தரிசித்துவிட்டு வந்திருக்கிறோம்
2016ல் அயோத்தியாவிலிருந்து ஆரம்பித்து ஸ்ரீ லங்கா வரையிலும் ஸ்ரீ ராமபிரான் வனவாசம் சென்ற மார்க்கத்தில் உள்ள முக்கிய ஸ்தலங்களை கண்டு வந்தோம்.
2016ல் கங்கோத்ரி, யமுனோத்ரி, கோமுக் போன்ற புனித
நதிகளில் தீர்த்த யாத்திரை செய்தோம்.
2017ல் அமர்நாத் யாத்திரையை எந்த தடங்களும்
இல்லாமல் சௌகர்யமாக சென்று தரிசித்து வந்தோம்.
இல்லாமல் சௌகர்யமாக சென்று தரிசித்து வந்தோம்.
இந்த வருடம் 2018ல் முக்திநாத் யாத்திரையும்
நல்லயபடியாக முடித்து வந்தோம்.
நல்லயபடியாக முடித்து வந்தோம்.
இத்தனை புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது என்பது ஒரு புனித அனுபவம் என்றாலும் அந்தந்த சமயங்களில் கிடைத்த சில அற்புதமான சம்பவங்களை நினைவு கூறும் போது மெய் சிலிர்த்து விடும். அவன் அருள் இன்றி அவன் தாள் வணங்குவதும் முடியுமோ? மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் “யாத்திரைப்பத்து” பகுதியில் வரும் இந்த பாடலை அடிக்கடி நினைவு கொள்ளவேண்டும்.
நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கள் ஆள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிறப்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற் கரியன் பெம்மானே.
என்பது போல மனமும் உடலும் ஒத்துழைக்கும் போதே பெருமானின் அடிகளில் சிந்தனையை திருப்பி கடவுளின் அருளுக்காக காத்திருக்க வேண்டும். “எதற்கும் பயப்படாதே, தயங்காதே, இலக்கை நோக்கி அடியெடுத்து வை, தொடர்ந்து முன்னேறு; சோதனைகள் விலகும், பாதை தெளிவாகும், நோக்கத்தை அடைந்தே தீருவாய், அதை யாராலும் தடுக்க முடியாது” என்று விவேகானந்தர் கூறும் இந்த வரிகள் எத்தனை உண்மை என்பதை புரிந்து கொள்வோம்.
ஆன்மீக சாதனைக்கு பக்குவம் என்பது வயதோ அல்லது குடும்ப பொறுப்புகளோ இடையூறாக இருப்பதில்லை, மனம்தான் முக்கியம். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும்போது அங்கிருக்கும் ஆகர்ஷண சக்திகள் நமது மனதை தூய்மை செய்து உலக விஷயங்களிலிருந்து ஈடுபாட்டை குறைக்கச்செய்து தெய்வ சிந்தனையை அதிகரிக்கிறது. கைலாய யாத்திரை செய்திருப்பவர்கள் மானசரோவர் ஏரியில் அதிகாலை மூன்று மணிக்கு தேவதைகள் ஸ்நானம் செய்ய வரும் காட்சியை கண்டு பேறு பெற்றிருப்பார்கள். சிறிய ஒளிப்பிழம்பு வடிவத்தில் நூற்றுக்கணக்கான தேவதைகள் மானசரோவர் தீர்த்தத்தில் நீராடி செல்லும் காட்சியை காண்பதும் சப்த ரிஷிகள் கயிலாயத்தை ஆகாய மார்கத்தில் சுற்றி வலம் வரும் காட்சியையும் இந்த பூதக்கண்களால் காண கிடைப்பது நாம் செய்த பெரும் பாக்கியம் அல்லவா.
ஸ்வயம்புநாத் புத்த விஹாரம்
ஜல நாராயண்
லும்பினி – சால் மரம்